கூட்டு ஒருமைப்பாட்டு அறிக்கை: வெட்'சோவெட்'டெனின் சட்ட அதிகாரம், ஆட்சி ஆகியவற்றுக்கு ஆசிய மக்களின் ஆதரவு

ஆமைத்தீவில் (வட அமெரிக்கா எனப் பொதுவாக அறியப் படுகிறது) பரவி வாழும் ஆசியர்களாகிய நாம் றோயல் கனடியன் மௌண்டட் பொலிஸின் (RCMP) அண்மைய வன்முறைச் செயல்களான வெட்’சோவெட்’டென் பாரம்பரிய நிலத்தில் அனுமதியின்றிப் பிரவேசித்தல், அந்நிலத்தைப் பாதுகாப்பவர்களைக் கைது செய்தல் ஆகிய நடவடிக்கைளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.  வெட’சோவெட்’டென் மக்களுக்கு ஆதரவாக உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப் படும் திரண்ட சமூகத்தினரின் வன்முறையற்ற ஒத்துழையாமை, பொருட்கள் நகர்வதைத் தடுத்தல், அரசியல்வாதிகளின் பணியிடங்களில் தங்குதல், ஆதரவு தரும் பேரணிகள் ஆகியவை உட்படப் பல நடவடிக்கைகளுடன் நாம் இணைந்து கொள்கிறோம்.

முற்போக்குத் தலைமை எனக் கொள்ளப்படும் ஜோன் ஹோகன் அவர்களதும் BC New Democratic Party கட்சியினதும் குற்றத்துக்கு உடந்தையாக இருக்கும் தன்மை குறித்து நாம் மிகுந்த ஏமாற்றம் கொள்கிறோம். இவர்கள் Coastal Gaslink  நிறுவனம் மாநில அங்கீகாரத்துடன் யுனிஸ்’டோட்’டன் பிரதேசத்துக்குள் அனுமதி இன்றிப் பிரவேசித்தலை ஆதரிக்கிறார்கள். இவ்வாறு பிரவேசித்தல் தொல்குடி மக்கள், அனுக் நுவட்டென் (வெட்’சோவெட்’டென் சட்டங்கள்), கூட்டுத் தலைமை ஆகியவற்றைக் குறித்த  ஐக்கிய நாடுகள் சபையின் உரிமைப் பிரகடனங்களை மீறுதலாகும். 

ட்ரான்ஸ்கனடா. பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் ஜோன் ஹோகன், கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆர்சிஎம்பி ஆகியோரை அந்நிலத்தில் இருந்து உடனடியாகப் பின்வாங்குமாறும்  பிறருக்கு எழுதிக் கொடுக்கப் படாத வெட்’சோவெட்’டென் நிலங்களில் அக்குடியினருக்குரிய சட்டங்களை அமலாக்கும்  பாரம்பரிய கூட்டு ஆட்சியினரை மதிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். காலனித்துவ சட்டங்களுக்கு முந்தைய காலத்தினதான வெட்’சோவெட்’டென் சட்டங்களை  மதிக்குமாறு ஆக்கிரமித்திருக்கும் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கிறோம்.

தொல்முதற்குடி மக்களினதும் ஆசிய மக்களினதும் போராட்டங்கள் பிரித்து விளக்க முடியாத அளவுக்குத் தொடர்புடையவை. தொல்குடி இனத்தவரினடமிருந்து களவாடப்பட்ட நிலத்தில்  புலம்பெயர்ந்த ஆசியர்களான நாம் வாழ்கிறோம். அவ்வாறு வாழ்வதற்கு அவர்களுடைய முன்அனுமதியைப் பெறத் தவறினோம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே அம்மக்களின் சரித்திரம் பற்றிக் கற்பதும் அது பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்வதும் நமது பொறுப்பாகும். ஏகாதிபத்திய வெற்றிகளினால் நம் தாய்நாடுகளில் ஏற்பட்ட  பாரிய தாக்கங்களை நாம் அறிவோம். இக்காரணத்தால் நம் தலைமுறைகளின் நிலம், உடமைகள் இழப்பு பற்றி நாம் நன்கு அறிவோம்.

கனடாவில் தொல்குடி மக்களின் நிலம், உடமைகள் தொடர்ந்து அபகரிக்கப் படுவதிலும் அழிக்கப் படுவதிலும் கிழக்காசிய முதலீட்டின் பங்களிப்பை நாம் அடையாளம் கண்டு ஏற்றுக் கொள்கிறோம். Coastal Gaslink’s LNG pipeline திட்டத்தில் முதலீடு செய்துள்ள பெட்ரோசைனா, மிட்சுபிஷி, கொரியன் காஸ் நிறுவனங்கள் சீனா, ஜப்பான், தென்கொரியா நாடுகளின் பிரதிநிதிகளாகும். இம்முதலாளித்துவ நிறுவனங்கள் வெட்’சோவெட்’டென் நிலத்தை அழித்து அதனால் லாபம் பெறும் செயல்களைச் செய்தாலும் அந்நிறுவனங்கள் நமது பிரதிநிதிகள் அல்ல என வலிமையாக உறுதிப் படுத்துகிறோம். நம்மைச் சூழ்ந்துள்ள வெள்ளை இனத்தவரின் மேலாதிக்கம், குடியேறியவர்களின் காலனித்துவம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களுக்கு நமது ஆதரவை வழங்குவதுடன் அவற்றை நமது சொந்தப் போராட்டங்களுடன் உறுதியாகத் தொடர்பு படுத்துகிறோம்.

கடந்த காலங்களிலும் இன்றும் கனடாவின் செல்வவளம் தொல்குடி மக்களிடம் இருந்து  களவாடப்பட்ட நிலம், இனப்படுகொலை, காணாமல் ஆக்கப்பட்ட, கொலை செய்யப்பட்ட தொல்குடிப் பெண்கள். தாய்வழி ஆட்சிமுறை அழிப்பு, புலம்பெயர் தொழிலாளிகளைச் சுரண்டல் ஆகியவற்றின் மேலே கட்டி எழுப்பப் பட்டுள்ளது. பெருநிறுவனங்களின் லாபங்களுக்காக -இந்நாட்டின் உறவுகளின் பன்முகத்தன்மையை வேண்டும் என்றே மறைக்கப் இனரீதியான பாகுபாடுகள்  பயன்படுத்தப் படுகின்றன. இந்த அணுகுமுறைகள் நமது சமூகங்களை ஒன்றிற்கு ஒன்று எதிராக போட்டியிட வைக்கின்றன. நாம் இந்த வேறுபாடுகளை நிராகரித்து உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள விழைகிறோம். 

இந்த நிலமைக்குப் பதில்வினையாக  குரல் கொடுப்பதற்கும் நம் வளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் உடனடி அவசர நடவடிக்கைகள் எடுப்பதற்கும்  நாம் நம் அனைத்து சமூகத்தினரையும் அழைக்கிறோம். பின்வரும் இணையதளங்களில் வெட்’சோவெட்’டென் மக்களுக்கு ஆதரவளிக்கும் வழிமுறைகளைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்

இந்த அறிக்கையில் கையெழுத்திடும்படியும் இதனைப் பகிர்ந்து கொள்ளும்படியும் அனைத்து ஆசிய மக்களையும் கேட்டுக் கொள்கிறோம். பெயர்கள், நிறுவனங்கள் (பொருந்தும் இடங்களில்) மட்டுமே பட்டியலில் சேர்க்கப் படும்.